தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கில் சிவகங்கை கோர்ட்டில் கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தை விதிகளை மீறியதாக கார்த்திக் சிதம்பரம் மீது சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணையின்போது நேரில் ஆஜராக தடை விதிக்கக்கோரியும் கார்த்திக் சிதம்பரம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் அரசியல் காழ்ப் புணர்ச்சியால் தன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவகங்கை கோர்ட்டில் கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்கும் படியும் தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.