காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும்

319 0

201610071006151928_h-raja-interview-cauvery-management-board-central_secvpfகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயம் அமைக்கும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டியில் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம், பொறையாறு அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் 1974-ம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் தமிழக மக்களுக்கும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கும் துரோகம் செய்த கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆகும். தமிழகத்தின் அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி செய்தவர். ஏன் அவர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலும் இரு கட்சிகளும் காவிரி பிரச்சினையில் நாடகம் ஆடுகின்றன. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தமிழக மக்களுக்கு ஆதரவாக தான் இன்று வரை செயல்பட்டு வருகிறது. சட்ட பாதுகாப்புடன் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் நரேந்திரமோடி அமைப்பார்.

சில கட்சிகள் குறைக்கூறும் நரேந்திரமோடி அரசை உலக நாடே பாராட்டுகிறது. பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தான் உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் மத்திய அரசு ஆதரவாக செயல்படும். ஒரு காலமும் துரோகம் இழைக்காது. குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க கேரள முதல்-அமைச்சர் பிரணயவிஜயன் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரது எதிர்ப்பை பிரதமர் நிராகரித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.