பொறுப்புக் கூறும் விடயத்திலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்திலும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தில் ஈடுபடுகின்றது என தமிழ் சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் இணை ஊடகப் பேச்சாளர்களான கு.குருபரன் மற்றும் வணபிதா எழிலன் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதற்குப் பின்னரும் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிலைமாறுகால நீதிக்கான பொறுப்புக்கூறலுக்காக அமைக்கப்பட்ட நீதிமன்றப் பொறிமுறைகள் மற்றும் அரசியல் சாசனம் தொடர்பில் மக்களிடம் கருத்துக்களை அறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேசத்திற்குக் காட்டி வருகின்றது.
மறுமுனையில் தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக மக்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு காணாமல்போனோர் அலுவலகம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றில் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.