நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரி காரணமாக, கூட்டு எதிர்க்கட்சியின் பெண்கள் பிரிவினால் மீண்டும் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை மோதரையில் இருந்து ஆரம்பிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர கூறினார்.
ஏழை மக்களின் தலைமீது அதிக வரியை சுமத்திவிட்டு அமைச்சர்கள் நல்ல சுகம் அனுபவிப்பதாகவும், மாகாண சபை உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து விட்டு அவர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இன்று தேயிலை தொழிலாளர்கள் மட்டுமன்றி நெற் செய்கையாளர்களும் மோசமான நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், விவசாயிகளுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட உர மானியம் போன்றவை அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு தற்போது மறந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்படும் அதிக வரிச்சுமை, கடன் சுமை மற்றும் நிவாரணங்களை குறைத்தலுக்கு எதிராக 08ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இரத்தினபுரியில் இடம்பெற உள்ள மக்கள் பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.