கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஆனால் ஜனவரி எட்டு புரட்சிக்குப் பின்னர் எமது அரசாங்கத்தில் அவ்வாறு தொலைபேசி பதிவு செய்யப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஒருவரின் தொலைபேசி பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகின்றதே என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
அது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்தப்படும். இதில் ஜனாதிபதி தெளிவாக இருக்கின்றார். ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தொலைபேசியும் பதிவு செய்யப்படுவதாக கூறியுள்ளாரே என மற்றொரு செய்தியாளரின் வினாவுக்கு விடை கூறுகையில்,
அவருக்கு அது நன்றாகத் தெரிந்த விடயம். ஏனெனில் அவர் காலத்தில் அது அதிகமாக நடந்தது. கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என்று அவர் என்னிடமே ஒருமுறை கூறியிருந்தார். ஆனால் அவரின் தொலைபேசியை அவரது வீட்டில் பதிவு செய்கிறார்களோ தெரியவில்லை என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.