கடற்படை முகாமுக்கு முன் 24 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

211 0

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜீம்மாத்தொழுகையின் பின்னர் சிலாபத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து நூற்றுக்கணக்கான முஸ்ஸீம் மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாக சென்றனர்.

பின்னர் சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை (15) 24 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்ற பகுதிக்குச் சென்ற மக்கள் வீதிக்கு அருகில் நின்று கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக மக்களின் காணிகளில் உள்ள கடற்படையினரை வெளியேற்றி குறித்த காணியை மீண்டும் மக்களுக்கு வழங்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் அருட்தந்தை கலந்து கொண்டதோடு,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தபோராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு,மன்னார் மெசிடோ நிறுவனம்,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை போன்றவற்றின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியதோடு,மன்னாரில் இருந்தும் மக்கள் சென்று ஆதரவு வழங்கினர்.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

யுத்தத்தின் போது முசலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்றயை தினம் 24 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,மக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.