அமெரிக்காவில் மாபியா கும்பலின் தலைவன் கொடூர கொலை

311 0

அமெரிக்காவின் மிகப்பெரிய மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவனது வீட்டின் வாசலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான். 

அமெரிக்காவின் 20ம் நூற்றாண்டின் மாபெரும் மாபியா குடும்பங்களில் ஒன்றான காம்பினோ மாபியா குடும்பத்தைச் சேர்ந்தவன் பிரான்ஸிகோ கேலி(53) ஆவான். இவன் கடந்த புதன் அன்று மாலை, ஸ்டேடன் தீவில் காலனித்துவ பாணியில் கட்டப்பட்ட அவனது  சிவப்பு செங்கல் வீட்டின் வாசலில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளான்.  அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து, கேலியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கேலியின் உடம்பில் மர்ம நபர்கள் 6 முறை துப்பாக்கியால் சுட்டிருப்பதும், பின்னர் நீல நிற டிரக் ஒன்றினைக் கொண்டு கேலி மீது மோதியதும் விசாரணையில் தெரியவந்தது.

கேலி கடந்த 2015ம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் காம்பியானா மாபியா கும்பலை வழி நடத்தி வந்துள்ளான். இவனை வெளிப்படையான மனிதன் என அழைப்பதும் உண்டு. அவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

நியூயார்க்கின் முக்கியமான 5 மாபியா குடும்பங்களில் காம்பினோ குடும்பமும் ஒன்று. ஜெனோவெசஸ், லச்சஸஸ், கொலம்பஸ், போனானோஸ் ஆகியவை மற்ற மாபியா குடும்பங்கள் ஆகும். கடந்த 34 வருடங்களில் ஒரு மாபியா தலைவன் கொடூரமாக கொல்லப்பட்டது இதுவே முதன்முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.