முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ், நாமல் ராஜபக்ஸவுடன் இணைந்து கடந்த வருடம் ஜனவரி 7ஆம் திகதி வரையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் பேச்சு வார்ததையின் போதே ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸிற்கு சொந்தமான ‘Perpetual Treasuries’ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பிரதான காரணம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி கொடுக்கல் வாங்கல்களே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகம் இலாபம் எவ்வாறு ஈட்டப்பட்டுள்ளதென இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ராஜித குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ஆட்சி காலத்தின் போதே அர்ஜூன் அலோசியஸ், நாமல் ராஜபக்ஸவுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும், மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் அதிக இலாபங்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும், அதாவது 400 வீதம் இலாபம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.