முல்லைத்தீவு மாவட்டம் சிராட்டிகுளம் பகுதிக் காடுகளில் அத்துமீறிய மரம் தறிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதிலும் உரியவர்கள் பாராமுகமாக இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மன்னார் மாவட்ட எல்லைக் கிராம்மாக விளங்கும் சிராட்டிகுளத்தில் தற்போது 46 குடும்பங்களே வசிக்கின்றனர்.
இதனை தமக்கு சாதகமாகப் பயன் படுத்துவோர் சட்ட விரோதமான முறையில் மரங்களைத் தறித்து அதனை மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிற்கு எடுத்துச் செல்கின்றனர். இது தொடர்பில் அதிகாரிகளிற்கு பல முறை தெரிவித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
இருப்பினும் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் விறகுத் தேவைக்காக பட்ட மரங்களை எடுத்தாலே கைது செய்யும் வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக கண்டும் காணாமல் இருப்பது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. எனத் தெரிவித்தனர்.
பிரதேச மக்களின் மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களால் எனது கவனத்திற்கு பல முறை கொண்டுவரப்பட்டது. இவ்வாறு மக்களால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உரிய திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் இதுவரை இவ் விடயத்திற்கு வன வளத் திணைக்களமோ காவல்துறையினரோ உரிய தீர்வினை வழங்கியதாகத் தெரியவில்லை என்றனர்.