வடக்கு கிழக்கில் பணியாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்றிலிருந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,ஊழியர்களின் நிரந்தர நியமனம், சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர் ஒன்றியத்தினர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு முன்பாக கால வரையறையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ் உண்ணாவிரதத்தில் வடகிழக்கு ஒன்றியத் தலைவர் எஸ். றோகான் ராஜ்குமார், செயலாளர் கஜன் கிழக்கு ஒன்றியத் தலைவர் ஜெயகாந்தன் உட்பட சக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் தொடர்பில் வடக்கு கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர் ஒன்றியத்தின் தலைவர் றோகான் ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களாகிய எமக்கு நாளொன்றுக்கு 250 ரூபாபடி மாதத்திற்கு 7500 ரூபாவே சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இச்சம்பளம் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதாது. பிள்ளைகளுக்கு ஓர் உடை வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கிறது. அதேவேளை பிள்ளைகளின் கல்வி குறித்து சிந்திக்ககூட முடியாத நிலையில் உள்ளோம். அதேவேளை பொலிஸாரின் அடிமைகளாக நாம் நடத்தப்படுகின்றோம்.
இது தொடர்பாக கடந்த இரண்டரை வருடங்களாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்த போதிலும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் உட்பட எல்லா அதிகாரிகளையும் எழுத்து மூலமாக தொடர்பு கொண்டோம். எல்லோருமே எம்மை ஏமாற்றிவிட்டனர். அண்மையில் மதவாச்சியில் வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவையை முற்றாக தடை செய்து நடைபெற்ற போராட்டத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விஞ்ஞாபனம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வேலைகளுக்கு சென்றோம். ஆனாலும் நமது கோரிக்கைகள் மறுக்கப்பட்டு புகையிரதக் கடவைகளில் ஆளில்லாத தன்னியக்க சமிக்ஞைகள் பொருத்துவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. அப்படியாக சமிக்ஞைகளை பொருத்துவார்களாயின் மூன்று வருடங்கள் இரண்டு மாதம் பதின்மூன்று நாட்களாக வேலை செய்யும் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இருநூறு கடவைகளுக்கு சமிக்ஞைகள் பொருத்துவதாக கூறியுள்ள நிலையில் 600 ஊழியர்கள் வரை வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எம்மை பேச்சுவார்த்தைக்கு வரும்படி 8ஆம் மாதம் 8ஆம் திகதி எமக்கு அழைப்பு விடுத்த போது போக்குவரத்து துறை அமைச்சின் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு 24 அரச திணைக்களத்தினர் இருந்தனர். இதன்போது அவர்கள் எங்களை அவமானப்படுத்தி அச்சுறுத்தி அனுப்பினர். ஜனாதிபதியும் ஒன்றும் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார். எதிர்கட்சித் தலைவர் சம்மந்தன் ஐயாவும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதியில் நம்பிக்கை வைத்து தொடர்ச்சியான போராட்டங்களையும் கடிதங்களையும் அனுப்பிவைத்த போதிலும் இதுவரை ஒரு கடிதத்திற்கு கூட பதில் வரவில்லை.
வடக்கு கிழக்கில் மட்டும் 1630 ஊழியர் எம்முடன் பணியாற்றுகின்ற போதிலும் ஒரு சிறு பகுதியினர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஏனெனில் நாம் உயிருடன் இங்கிருந்து போவோம் என்ற நம்பிக்கை கூட இல்லாமலே போராட்டத்தில் குதித்துள்ளோம் என தெரிவித்தார்.
இது குறித்து வடக்கு கிழக்கு பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் ஒன்றியத்தின் செயலாளர் கஜன் தெரிவிக்கையில்
கடந்தமூன்றரை ஆண்டுகளாக போராடியும் எவ்வித தீர்வும் கிடைக்காத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் . இதைவிட பொலிஸாரின் அச்சுறுத்தல் எமக்கு உண்டு. வேலை நிறுத்தம் செய்யாமல் யாவரும் வேலைக்கு செல்லும் படி அச்சுறுத்தினர். நாங்கள் அவர்களிற்கு தொழில் அடிமைகளாகவே இருந்துவருகின்றோம் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாகவே ஒரு சில ஊழியர்கள் இன்று கடமைக்கு சென்றுள்ளனர். எமக்கு நிரந்தர நியமனம் தரும்வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.