வடக்கு மாகாணசபை உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது!

607 0

14484940_1613408668685359_7387599784054474086_nவடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என இன்று புதன்கிழமை நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,அன்ரனி ஜெகநாதன் அவர்களின் மரணச்செய்தி அறிவதற்கு முதல் நாள் அவருடன் வெளிநாட்டு பயணங்கள் பற்றியும், முல்லைத்தீவிற்கு இரட்டைவழி ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் உரையாடினேன்.

எனது வதிவிட அலுவலகத்தில் கூட இருந்து காரியாலய அலுவல்களை ஆற்றிவிட்டு சுகதேகியாக சென்ற இவரின் மரணச் செய்தி அதிர்சியாக இருந்தது. இச் செய்தி பொய்யாகக் கூடாதோ என்று எனது மனம் ஏங்கியது.

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி ஜெகநாதன் ஆண்டான்டு காலமாக தமிழரசுக் கட்சியின்தூணாக செயற்பட்டு வந்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் செயற்பட்டு வந்தார். இவரின் தந்தை மரியப்பிள்ளை முல்லைத்தீவு பிரதேச சபைத் தவிசாளராக பணியாற்றினார். அவருடைய தந்தை இறந்ததும் சிறிய தந்தை பொறுப்பேற்று நாடாத்தினார்.

பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அன்ரனி ஜெகநாதன் நல்ல ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டார். எனக்கு அவரிடம் பிடித்த விடயம் அவரின் வெளிப்படையான தன்மை. தனது கருத்துக்களை ஓங்கி உரைத்து சரி பிழைகளை தன்னோடு இருப்பவர்களுக்கும் உணர்த்துவார்.

கடைசியாக அவரிடம் பிரித்தானிய நாட்டிற்கான பயன ஒழுங்குகள் பற்றியும் அங்கு நடைபெறவுள்ள கூட்டங்கள் பற்றியும் உரையாற்றிவிட்டு தனது கடவுச்சீட்டையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது. அவருடைய பிரிவை தாங்காது இன்னலுறும் அவரின் குடும்பத்துடன் எமது கவலைகளை பகிர்ந்து கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.