கடந்த மூன்றரை வருடங்களில் மீள்குடியேற்ற அமைச்சினால் 8,50,000 ரூபா பெறுமதியான 20,715 வீடுகள் வடக்கு, கிழக்கில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சபையில் தெரிவித்தார்.
அத்துடன் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 3147 பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டு 12,757 பயனாளிகளுக்கும் 2017 ஆம் ஆண்டு 4116 பயனாளிகளுக்கும் 2018 ஆம் ஆண்டு 3660 பயனாளிகளுக்குமாக மொத்தமாக 20,533 பயனாளிகளுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று 2016 ஆ ம் ஆண்டு 7598 மலசல கூடங்களும் 2017 ஆம் ஆண்டு 4496மலசல கூடங்களும் 2018 ஆம் ஆண்டு 5716 மலசல கூடங்களுமாக மொத்தம் 17810 மலசல கூடங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குடிநீர் வசதியை மேம்படுத்தல், இலவச மின்சார இணைப்பை வழங்குதல், உள்ளக வீதிகள் புனரமைப்பு, சிறு குளங்கள் புனரமைப்பு, நுண்கடன் சுமையுள்ளவர்களுக்கான உதவி சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு திட்டம்,காணிகளை விடுவிப்பதற்காக செயல்திட்டம்,யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேதமடைந்த சொத்தழிவுகளுக்கான நட்டஈடு வழங்கும் திட்டம், சுயதொழில் உதவிகள் ,விசேட திட்டங்கள் என பலவாழிகளிலும் மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.