யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கழிந்தும் வடக்கில் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – பிமல் ரத்நாயக்க

394 0

யுத்தம் முடிந்து பத்துவருடமாகியும் வடக்கில் காணிப்பிரச்சினை, சமுகப் பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்க்ககப்படாமல் இருக்கின்றது.

அத்துடன் 90 ஆயிரம் விதவைகளில் 40 வயதுக்கு குறைவான 50ஆயிரம் பேர் இருகின்றனர். அதனால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஒக்டோபர் அரசியல் பிரச்சினைக்கு பின்னரே பிரதமரின் பொறுப்புக்கு வந்தது. ஆனால் இதற்கு முன்னர் 3 வருடங்களாக வடக்கு கிழக்கு அவிருத்திக்கு  பொறுப்பாக இருந்தவர்களால் முறையான வேலைத்திட்டங்கள் மேற்கொண்டிருக்கவில்லை. 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை கைத்துக்கொண்டு கம்பனிகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு பாரிய கொள்ளை இடம்பெற்று வந்தது. இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பொறுத்தமான அமைச்சரை நியமிக்காத பொறுப்பை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.