ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

452 0

ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இடித்துரைப்பு! –அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக சமூகம் இனியும் இழுத்தடிக்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது.

ஈழத்தீவின் மனித உரிமை நிலவரம் குறித்தும், நான்காம் கட்ட ஈழப்போரில் நிகழ்ந்தேறிய கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றியும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் ஆராயப்பட்டு வரும் நிலையில் கடந்த 12.03.2019 செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கட்டிடத் தொகுதியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கொன்று நடாத்தப்பட்டது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளியுறவுப் பொறுப்பாளர் திரு. திருக்குலசிங்கம் திருச்சோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் டென்மார்க்கைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி கந்தசாமி துவாரகா, பிரித்தானியாவைச் சேர்ந்த பன்னாட்டு விவகார அரசறிவியலாளர் கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.

இதன்பொழுது கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து திரு திருக்குலசிங்கம் திருச்சோதி அவர்கள் உரையாற்றுகையில், மானிட குல வரலாற்றில் இனியொரு மனிதப் படுகொலை நிகழக்கூடாது என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. மன்றம் ஈழத்தமிழர் விடயத்தில் கடமை தவறியிருப்பதை சுட்டிக் காட்டியதோடு, அரசுகளின் சதுரங்க விளையாட்டில் ஈழத்தமிழர்களுக்கான நீதி சிக்குண்டு சின்னாபின்னாமாவது எந்த விதத்திலும் ஏற்புடையதன்று என்று குறிப்பிட்டார்.

இவ்விடத்தில் திருமதி கந்தசாமி துவாரகா அவர்கள் உரையாற்றுகையில், பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த பத்தாண்டுகளாக அனைத்துலக சமூகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் எவையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமையவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்கள் உரையாற்றுகையில், பூகோள அரசியலுக்கு அப்பால் சென்று ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்குவதில் அனைத்துலக சமூகத்திற்கு உண்மையான அக்கறை இருந்தால் அது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை விசாரணை செய்வதற்குப் பன்னாட்டு நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதே ஒரேயோரு வழி என்று குறிப்பிட்டார்.

அத்துடன் 2009ஆம் ஆண்டுடன் ஈழத்தீவில் போர் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறிக் கொண்டு சத்தம் சந்தடியற்ற இனவழிப்பு யுத்தம் ஒன்றைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு நிகழ்த்துவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அதன் கருப்பொருளைத் திசைதிருப்புவதற்கு சிங்கள படை அதிகாரி ஒருவர் எடுத்த முயற்சி, அமர்வின் தலைவராலும், பேச்சாளர்களாலும், அங்கிருந்த பார்வையாளர்களாலும் மண்கவ்வ வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!