பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பங்கள் நடைபெற்று பதற்றமாக காணப்பட்டு வந்தது.
இதனையடுத்து உரி தாக்குதல் இருநாடுகளிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று வந்த ஐ.நா பொது சபை கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்சனையை முன் வைத்து இந்தியா மீது குற்றச்சாட்டுக்களை கூறினார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் பின்னர் உரையாற்றினார்.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் நேற்று பேசியதாவது:-
எங்கள் நாட்டின் உள் பகுதியான காஷ்மீர் குறித்து இங்கே சில தினங்களுக்கு முன்பு தனியான ஒரு குரலை கேட்டேன். அது சர்வதேச அளவில் பயங்கரவாததை தோற்றுவாயாக கொண்டுள்ள நாட்டில் இருந்து எழுந்துள்ளது.காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி தான். தொடர்ந்து அப்படி தான் இருக்கும். இதுபோன்ற சர்வதேச அரங்கை பாகிஸ்தான் பயன்படுத்தி தவறாக யதார்த்தத்தை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு தெரிவித்தார்.