அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்டு நகரில் வசிப்பவர் பால்மீத் சிங். சீக்கியர். இவர் சம்பவத்தன்று அங்கு தனது நண்பர்களுடன் கலிபோர்னியா அவினியு என்ற இடத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்காக சென்றார்.
சாப்பாட்டுக்கு இடையே அவர் உணவு விடுதிக்கு வெளியே வந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வந்த ஒரு மர்ம நபர், “நீ இந்த நாட்டை தகர்க்கப்போகிறாய். நான் உன்னை கொன்றாக வேண்டும். உன்னை நான் இப்போதே கொல்லப்போகிறேன்” என கோப ஆவேசத்துடன் கூறினார். அத்துடன் பானத்தை பால்மீத் சிங் மீது வீசினார். அது அவரது தலைப்பாகை, தாடி, உடை, செல்போன் மீது சிதறியது. அதைத் தொடர்ந்து அந்த நபர், வாகனங்கள் நிறுத்துமிடத்தை நோக்கி சென்று விட்டார். அவரை பால்மீத் சிங் பின்தொடர்ந்து சென்று, அவரது வாகன எண்ணை குறித்து கொண்டு வந்து போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது, பலர் பார்த்தும் அந்த நபரை தடுத்து நிறுத்தவில்லை என்பதுதான் பால்மீத் சிங்கின் ஆதங்கமாக அமைந்துள்ளது.
போலீஸ் தரப்பில் கூறும்போது, “பால்மீத் சிங் புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட நபரை நாங்கள் பிடித்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக யாரேனும் தகவல்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்றனர்.பால்மீத் சிங் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல், சீக்கிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.