கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் ; 4 நாட்கள் மீன் பிடிக்க தடை..!

391 0

கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் சோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற உள்ளதால். ராமேஸ்வரம் மீனவர்கள் 4 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில், இந்தியா – இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் வெகு கோலாகலமாக நடைபெறுகிறது.

இதில், இந்தியாவில் இருந்து சுமார் 2,500 பக்தர்கள் கலந்துகொள்ள பெயர் பதிவு செய்துள்ளனர். அதுபோல், இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள பெயர் பதிவு செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, அந்நியர்களின் ஊடுருவலை தடுக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் சோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று 13ஆம் திகதி முதல் இம்மாதம் 16ஆம் திகதி வரையுள்ள 4 நாட்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த 4 நாட்களுக்கும், மீன்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்று மீன்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.