ஜெயலலிதா உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்

314 0

201610060727259258_apollo-hospital-aiims-doctors-to-help-in-treatment-of_secvpfஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜெயலலிதா தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார்.

டாக்டர்கள் குழுவினர் சீரான இடைவெளியில் முதல்-அமைச்சர் உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை சந்திக்க தினமும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் வெளியே விடிய, விடிய காத்துக் கிடந்து ஜெயலலிதா உடல்நிலை பூரண குணம் அடைய தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று 14-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை நேற்றும் மேற்கொண்டனர்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று மாலை 5 மணி அளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தனர்.

அந்த டாக்டர்கள் குழுவினர் இரவு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் உடன் கலந்து ஆலோசித்தனர். பின்னர் முதல்-அமைச்சரின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக தெரிகிறது.