உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றும், தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்திற்கு சென்றோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பிரமுகரும், வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.வி. காமராஜ், வேதாரண்யம் நகர 1-வது வார்டு செயலாளர் சி.சா.கபீர் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
மு.க.ஸ்டாலின்:- நாங்கள் தொடுத்த வழக்கு தானே அது. ஆலந்தூர் பாரதி பெயரில், தி.மு.க. சார்பில் தான் அந்த வழக்கை தொடர்ந்தோம். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் அ.தி.மு.க., அரசு எந்தளவிற்கு தேர்தல் ஆணையத்தோடு ஒரு நெருங்கிய தொடர்பை வைத்துக்கொண்டு, எந்த அளவிற்கு அக்கிரமங்கள் செய்யவிருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அதை நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.
கேள்வி:- தேர்தல் ஆணையரை மாற்றுவதற்கு ஏதாவது முயற்சிகள் மேற்கொள்வீர்களா?
பதில்:- ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்திருந்த வழக்கு ஒன்றிற்கு தீர்ப்பு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், உச்சநீதிமன்றத்திலும் ஒரு வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. அந்த வழக்கை பொறுத்தவரையில் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்தி, வெளிமாநில அதிகாரிகளை கொண்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறோம்.
அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த ஆட்சி இப்படி செய்யும் என்றுதான், நாங்கள் முன்னெச்சரிக்கையாக இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறோம்.
ஆனால் ஒன்று, எந்தக்காரணத்தைக் கொண்டும் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் நீதிமன்றத்தை அணுகவில்லை. தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்றுதான் நீதிமன்றத்திற்கு சென்றோம்.
கேள்வி:- தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பன்னிரெண்டு நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் எதிர்க்கட்சி தலைவராக நீங்களோ? அல்லது கருணாநிதியோ நேரடியாக போய் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- இப்போது அவர்கள் யாரையும் சந்திப்பதில்லை. சந்திக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக செய்தி. அதனால், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கனவே கருணாநிதி மிகத்தெளிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஆட்சிப்பொறுப்பில் முதல்-அமைச்சருக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய அமைச்சர்களோ அல்லது தலைமைச்செயலாளரோ முதல்-அமைச்சரின் உடல்நிலை குறித்து முறையான விளக்கம், உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும். அப்படி விளக்கம் சொன்னால், நாட்டில் பரவக்கூடிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், இதுவரையில் அந்த நிலையை அவர்கள் எடுக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
கேள்வி:- காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்க முயற்சி செய்தார்கள். அதேபோல தலைமைச் செயலாளரும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறாரே?
பதில்:- மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க., அரசு எடுத்திருக்க கூடிய இந்த முடிவை கண்டிக்கக் கூடிய வகையில், நாளை மறுநாள் தஞ்சையில் மிகப்பெரிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். அதன் மூலமாக எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கவிருக்கிறோம்.
கேள்வி:- காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருக்கிறது. அதைப்போல் தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டப்படுமா?
பதில்:- இது, நீங்கள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால், அவர் இப்போது உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கின்ற காரணத்தால், அதற்கு அடுத்தநிலையில் இருக்கக்கூடிய நிதித்துறை அமைச்சரையோ, பொதுப்பணித்துறை அமைச்சரையோ நேரில் சந்தித்து இதற்கான விளக்கத்தை கேட்டு, அதனை நீங்கள் தான் மக்களிடத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.