தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி பணம் என்பதை மாற்ற வேண்டும் என்று கடலூரில் வைகோ பேசினார். கடலூர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமையில் கடலூரில் நடந்தது.முன்னதாக வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நல கூட்டியக்கத்தில் நான்கு கட்சிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டணிக்கு சில கட்சிகள் வரலாம், தேர்தலுக்கு பின்னர் அவர்கள் விலகி செல்லலாம். அதுபோன்ற நிலைப்பாட்டை த.மா.கா.வும், தே.மு.தி.க.வும் எடுத்து இருக்கின்றன. நாங்கள் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்வதால், அவர்களோடு நேச உறவை தொடர்ந்து கொண்டு இருக்கின்றோம்.
சுவாதியின் படுகொலை தமிழகத்தை உலுக்கியுள்ளது. பணம் வாங்கிக்கொண்டு முன்பின் அறியாதவர்களை கொலை செய்கிற போக்கு தமிழ்நாட்டில், வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த கொலையில் ஈடுபடுகிறவர்கள் 19 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள். இதில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிற போது காவல்துறையின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று முதல்-அமைச்சர் கூறியது அவருடைய விளக்கத்தின் நம்பகத்தன்மையையே அழித்து விட்டது. இந்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையை கண்டு கொள்வதே இல்லை. இப்பிரச்சனையில் ஒரு மாநில அரசு இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது, ஈழப்பிரச்சனைக்கு பொதுவாக்கெடுப்பு தான் தீர்வு.
கச்சத்தீவு பிரச்சனை முடிந்து போன பிரச்சனை அல்ல, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் ஒருபகுதியை வேறுநாட்டுக்கு கொடுக்க முடியாது, அதுவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.இந்த பிரச்சனையில் எத்தகைய தகிடுதத்தங்கள் நடந்தன என்பது சட்டமன்றத்தில் மணிக்கணக்காக நடைபெற்ற விவாதங்கள் மூலம் தெரிய வரும். அதற்கு மேல் நான் அதற்குள்ளே போக விரும்பவில்லை. சட்டமன்ற விவாதமே, யார் செய்தது துரோகம்?, யார் மேல் தவறு உள்ளது? என்பதை கண்ணாடி போல் காட்டும்.
நெய்வேலியில் நடைபெற்ற தொழிற்சங்க தேர்தலில் நாங்களும், விடுதலை சிறுத்தைகளும் ஆதரித்த சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.பணம் மட்டுமே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலையை தமிழக மக்கள் மாற்றுவார்கள். இது தொண்டர்கள் ஆரம்பித்த கட்சி. இதை அழிக்க முயற்சிக்கிறார்களே என்ற தொண்டர்களிடம் எழுந்துள்ள ஆவேசம் கட்சிக்கு புத்துணர்வை கொடுத்திருக்கிறது. நான் ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.