அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்ததாக 70 பேர் கைது

334 0

201610060856443091_india-arrests-70-call-center-workers-accused-of-duping-us_secvpfமிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக 70 பேரை கைது செய்தனர்.

மிராரோட்டில் 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டதாக 70 பேரை கைது செய்தனர். மேலும் கால்சென்டர்களில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பையை அடுத்த தானே மாவட்டம் மிராரோட்டில் உள்ள குறிப்பிட்ட 3 கால்சென்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள், அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு அந்த நாட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் போல்பேசி கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்கள் அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி, வருமான வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி தினசரி ரூ.1 கோடி வரையிலும் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

அண்மையில் இதை அமெரிக்க போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் தானே போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட 3 கால்சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கமிஷனரின் உத்தரவின்பேரில் நேற்றுமுன்தினம் இரவு குறிப்பிட்ட 3 கால்சென்டர்களிலும் 40 அதிகாரிகள் உள்பட 200 போலீசார், 3 பிரிவாக பிரிந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று அதிகாலை வரையிலும் நடந்தது. அப்போது, அமெரிக்கர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக கால்சென்டர் உரிமையாளர்கள், ஊழியர்கள் என 772 பேர் பிடிபட்டனர்.

இவர்களில் கால்சென்டர் ஒன்றின் நிர்வாகி ஹைதர் அலி மன்சூரி (வயது 35), இயக்குனர் அங்கித் குப்தா(35), மேலாளர் அர்ஜூன் வாசூதேவ் உள்பட 70 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கால்சென்டர்களில் இருந்து 851 ஹார்டு டிஸ்க், பல்வேறு சர்வர்கள், மடிக்கணினிகள், செல்போன்கள் என ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 600-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.