வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழினத்தை பிடுங்கி எறிந்துவிட்டுத் தமிழரது நிலத்தை அபகரித்து அவர்களது வாழ்வையும் வாழ்வியலையும் துடைத்துவிடும் நோக்கத்தோடு சிங்களமும் அதனது அரசுப்பொறியும் இடையறாது இயங்கி வருகின்றது. அரசுப்பொறியினது இன அழிப்பினுட் தப்பி ஏதிலிகளாக உலகெங்கும் தமிழினம் உயிர்காக்கப் புலம்பெயர்ந்து வாழமுற்பட்டபோது, தமது அடுத்த தலைமுறையை எதிர்கொண்ட சூழலில் பெற்றோரும் தமிழ் ஆர்வலர்களும் தாய்மொழிக் காப்புக்காக ஆங்காங்கே சிற்சில முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால்,புலத்திலே எமது சிறார்கள் மொழியை இழந்து அடையாளமற்றவராய் எமதினம் மாறிவிடக் கூடாது என்ற உயரிய நோக்கோடு தொடங்கப்பட்ட தமிழ்க் கல்விக் கழகமானது மொழியோடு கலை பண்பாடுகளையும் ஊட்டி வளர்த்து வருகின்றது. அந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாகத் தமிழ்த் திறன் போட்டி மொழியை வளர்ச்சிக்கு வலுவூட்டி வருகின்றது. அதேவேளை கலையாற்றல்களும் மொழியோடு இணைந்து பயணித்தபோதும் அதனை மேலும் வளர்த்தெடுக்கும் தேவையின் கரணியமாகக் கலைத்திறன் போட்டிகளைத் தமிழ்க் கல்விக் கழகம் கடந்த இரு ஆண்டுகள் நடாத்தி முன்றாவது ஆண்டாகவும் மாநில மட்டப்போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றவர்களைத் தேர்வுசெய்து இறுதிப் போட்டியை கற்றிங்கன் நகரிலே நடாத்தியது.
கலைகள் மக்களது வாழ்வியலை ஊடறுத்துப் பேசும் பாடும் ஆடும் ஒரு காலக் கண்ணாடியாகும். அந்தக் கலைகளைத் தமிழர் போற்றிக்கொண்டாடிய புறச்சூழலகன்றதொரு நிலையை இனவழிப்புப் போர் தாயக நிலத்திலே எமதாக்கிய நிலையில் எமது பாரம்பரியக் கலைகள் முடங்கியது. தமிழன் நிலத்தை மட்டுமன்றிக் கலைகளையும் மீட்டெடுக்க வேண்டிய நிலைக்குட் தள்ளப்பட்டுள்ளான் என்பதே மெய்நிலையாகும். புலமெங்கும் பரந்த தமிழன் தான்வாழும் நாடுகளுள் அமிழ்ந்து அழிந்துவிடுவான் என்ற இனவாத அரசுகளின் சிந்தனையைப் புலத்திலே தனது செயற்பாடுகள் ஊடாக முறியடித்து வருகின்றான். அதன் ஒரு வடிவமாகப் பாரம்பரியக் கலைவடிவங்களுக்கான போட்டிக் களமும் அமைகின்றதெனலாம். வாய்பாட்டு, கும்மி, கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, கூத்து, நாடகம், பரதம், மற்றும் விடுதலை நடனங்களென ஒரு நிரலாக அமைந்த போட்டிக்களத்திலே, புலத்திலே பிறந்து வளரும் எமது வளரிளம் தமிழரது கலையாற்றல்கள் மெய்சிலிர்ப்பனவாக உள்ளன. நிலத்தோடு ஒன்றித்து வாழும் ஒருவனால் மட்டுமே அந்தக் காட்சிகளைக் கிரகித்து பிரதிபலிக்கமுடியும். ஆனால் புலத்திலே பிறந்து வளரும் இவர்கள் மொழியும் சூழலும் வேறானபோதும் கலைகளிற் சிறப்போடு விளங்குவது வியப்பிற்குரியதாகும்.
இன்று தாயகத்திற்கூட அரிதாக அரங்காற்றபடும் கலைவடிவங்களாகிவிட்ட கரகம் காவடி பொய்காற்குதிரை கூத்து போன்றவற்றிலே வளரிளம் தமிழர்கள் காட்டும் ஆர்வமும் வெளிப்பாடும் தமிழரது கலைகள் வாழும் என்றதொரு நம்பிக்கையை ஏற்படுத்தி நிற்கின்றது. தமது பிள்ளைகளை ஊக்குவிக்கும் பெற்றோர்கள் கலைப்படைப்புகளை அணியம் செய்யும் கலைஞர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று கலைத்தமிழுக்கு அணிசேர்ப்பது அழகிலும் அழகு. தாயகத்தைக் கடந்து வாழும் சூழலில் இந்த நிகழ்வு பிரமிப்பினை ஏற்படுத்துகின்றமையைப் பார்த்து அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரமுடியும். ராஜராஜசோழனை நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் உருவதின் வழி எப்படிக் கண்டோமோ அப்படியே இராவணையும் தமிழரது பாரம்பரியக் கலைகளையும் எமது மூன்றாந் தலைமுறைச் சிறார்களுக்குத் தமது கலைத்திறன் ஆற்றலின் வழியே வளரிளம் தமிழர்களாய் வலம்வரும் தமிழாலய மாணவச் செல்வங்கள் பதிவுசெய்வதானது தமிழுக்கும் தமிழருக்கும் பேருவகையும் பெருமையும் தருவதாய் உள்ளது.
தமிழர்களைத் தாயகத்திலேயிருந்து துரத்தியடித்து அவர்களது தேசியத்துக்கான திரள்நிலையைச் சீர்குலைத்து அழித்துவிட எத்தனிக்கும் பேரினவாதச் சக்திகளுக்கும், தமிழினத்துள் இருந்தவாறு இரண்டகம் புரியும் சக்திகளுக்கும் கூட இப்போட்டிகளம் பல்வேறு செய்திகளைச் சொல்லி நிற்கின்றது. தமிழினம் என்னதான் நிலத்தைப் பிரிந்தபோதும், பல்வேறு சுமைகளுக்குள் நின்றவாறு நிலை பிறழ்வுறாத நிலையெடுத்துத் தமது பிள்ளைகளை ஊக்கப்படுத்தித் தமிழோடு வளர்க்கும் பெற்றோரின் அயராத செயல்நெறியையும் இக்களம் பதிவுசெய்தவாறே நகர்கிறது. இந்தக் கலைத் திறன்போட்டியானது போட்டியாளர்களின் வருகையில் இருந்து ஒப்பனை ஒத்திகை அரங்காற்றுகையெனக் கலைஞர்கள் நெறியாளர்கள் பெற்றோர்கள் எனச் சங்மித்து அந்த மண்டபச் சூழலில் நிலவிய உற்சாகமானது ஒரு கலைத் திருவிழாவாகவே காட்சியளித்தது. இந்த முழுநிகழ்வையும் விபரிப்பதாயின் அவர்களது வருகையில் இருந்து ஒப்பனை ஒத்திகை அரங்காற்றுகையெனப் பலபக்கங்களாக எழுதலாம். மாநில மட்டப் போட்டிகளில் முதலிடங்களைத் தமதாக்கிய முப்பத்தொன்பதுக்கு மேற்பட்ட தமிழாலயங்களில் இருந்து அறுபத்து ஐந்து போட்டிகளில் நானூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டி நிகழ்வுகளைப் பார்த்தபோது நாம் புலத்திலா அல்லது தாயகத்திலா நிற்கின்றோமென்ற வினாவை எழுப்ப முடியாதிருக்க முடியவில்லை.