பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவு

348 0

teaestateபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ஊடாக 730 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரவு கூறியது.

எனினும், தாம் அதற்கும் அதிகமான தொகையொன்றை கோரியிருந்ததாகவும், அதற்கு முதலாளிமார் சம்மேளனம் இதுவரை இணக்கத்திற்கு வரவில்லை எனவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 நாட்களாக காணப்படும் வேலை நாட்களை 6 நாட்கள் வரை அதிகரிக்கவும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது.

இதன்பிரகாரம், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிற்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவரின் சம்பளம் நாளொன்றுக்கு 817 ரூபாவாக இன்றைய பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கோரிக்கைகளை தவிர்த்து தாம் மேலும் கோரிக்கைகளை முதலாளிமார் சம்மேளனத்திடம் விடுத்துள்ளதாகவும், அதனால் இன்றைய பேச்சுவார்த்தை முடிவொன்று எட்டப்படாத நிலையில் நிறைவு பெற்றுள்ளதாகவும் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என தான் நம்புவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்;, காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் ரமேஷ், ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், இந்த சந்திப்பில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்னவும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.