எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக கூறப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள விடயங்கள் அவரால் கூறப்பட்டிருக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாத பிரதிவாதங்களின்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
எழுக தமிழ் நிகழ்வில் போது பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கு முரணான வகையிலும் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துக்களை வெளியிட்டிருந்ததாகவும், அந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கோரி நிற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விடயத்தை சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும், தாம் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் தாம் இந்த அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் தொடர்பிலும் இணக்கப்பாட்டுடனான ஏற்பாடுகள், கலந்துரையாடல்கள் அடிப்படையில் அனைவரது மத்தியிலும் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டும் என்றே தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக கூறப்படும் விடயங்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்ததையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்களை தான் தமிழ் மொழியிலேயே வாசித்திருந்ததாகவும், அந்த அறிக்கையில் எந்தவித தவறுகளும் காணப்படவில்லை எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.