மட்டக்களப்பு . வவுணதீவு பிரதேசத்தில் இதுவரை குடிநீர் வழங்கப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை 11 ஆம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்
மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, உன்னிச்சை, நெடியமடு, காந்திநகர், பாவற்கொடிச்சேனை ஆயித்தியமலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்த்த பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
தமது உன்னிச்சை கிராமத்தில் அமைந்துள்ள குளத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் குடிநீர் வழங்கப்படும்போது, குளத்தை அண்டிய தமது கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படாதது பெரும் அநீதியானது என கிராம மக்கள் கருத்துத் தெரிவித்தனர்
மேலும் இதன் போது, “அரசே உடனடியாக குடிநீரை வழங்கு, நீர் இன்றி யார் வாழ முடியும் – நாங்கள் என்ன பாவம் செய்தோம்?, அசுத்தமான குடிநீரை பருகி வரும் எமக்கு சுத்தமான குடிநீரைத்தா,
எம்மை ஆரோக்கியமாக வாழ விடு” போன்ற கோசங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியவாறும் இம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உருப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் போன்றோர், இவ்விடயம் தொடர்பில் தாம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தொடர்ந்து இதனை பாராளுமன்றத்தில் கொண்டு செல்லவுள்ளதாகவும், அல்லது தமது நிதி ஒதுக்கீட்டில் இப்பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர்