மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான, புதியத் திட்டம்…!

276 0

இலங்கை மின்சார சபையினால்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மின் சக்தி பாவனைக்குட்படுத்தப்படும் வீடுகளில் சக்தி சேமிப்பு சாத்தியக் கூறுகளின் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதன் தொடர் நடவடிக்கையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மின் பாவனை வீடுகளில் சீரமைவான மானி (Smart)பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் வீட்டுக்கு மின் பாவனையை முறையாக முகாமை செய்வதற்கு இருக்கின்ற வாய்ப்புக்கள் தொடர்பான ஆய்வின் இறுதிக் கட்டத்தில், தற்போது தங்களது வீட்டில் சீரமைவான (Smart) மானியொன்றைப் பொருத்தி மின் பாவனை ஒழுங்கு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

இந்த விடயத்தில் ஒத்தாசை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பாளர்களால் ஏற்கெனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இதற்கென மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 900 மின் பாவனை இடங்கள் தெரிவு செய்யப்பட்டு கள ஆய்வாளர்கள் 20 பேர் கணக்கெடுப்பை மேற்கொண்டு வந்திருந்தனர்.

மின் சக்திச் சேமிப்புத் தொழினுட்பங்கள், மற்றும் வழிமுறைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியான நன்மைகளைப் பெற்றுத் தருவதுடன் மாதாந்த மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே இவ் ஆய்வுக் கணக்கெடுப்புத் திட்டத்தின் நோக்கமாகும் என அந்த ஆய்வின்போது இலங்கை மின்சார சபையால் தெரிவிக்கப்பட்டிருந்தது.