எந்த அதிகாரமும் இல்லாத வடகொரிய நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வடகொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் வம்சத்தினர்தான் அந்நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருப்பது கட்டாயமாகும்.
அரசையும், ராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவரே நாட்டுக்கு தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பார். அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது. தலைவரால் வரைவு செய்யப்படும் சட்டங்களுக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் வழங்குவது மட்டுமே அதன் ஒரே பணி.
சுப்ரீம் மக்கள் சபை (எஸ்.பி.ஏ.) என அழைக்கப்படும் வடகொரியாவின் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் அன், பியாங்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி நேற்று அங்கு தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. கிம் ஜாங் அன், பியாங்காங் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார்.
அதே போல் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிகளில் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வடகொரியாவை பொறுத்தவரை மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. அதாவது 35 ஆயிரம் மக்களுக்கு ஒரு பிரதிநிதி தேர்வு செய்யப்பட்டு அவர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 687 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு சுமார் 700 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
அதே போல் வடகொரியாவில் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும். 17 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீதத்தை ஒட்டிய அளவிலேயே வாக்குப்பதிவு இருக்கும். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 99.97 சதவீத வாக்குகள் பதிவானது. 0.03 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்ததற்கு வாக்காளர்களின் உடல்நிலையே காரணம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் வாக்குப்பதிவு 100 சதவீதத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு தொகுதிக்கு ஒரே ஒரு வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார். கிம் ஜாங் அன் தலைவராக இருக்கும் கொரியா தொழிலாளர் கட்சியும், சமூக ஜனநாயக கட்சி மற்றும் சொண்டோயிஸ்ட் சோங்கு ஆகிய கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களத்தில் நிறுத்தும்.
ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவதால் அவரை அங்கீகரித்து, அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியே கிடையாது. மக்கள் தங்களது வேட்பாளரை புறக்கணிப்பது என்பது அரிதிலும் அரிதாக பார்க்கப்படுகிறது. அப்படி செய்யும் ஒரு சிலரை கூட பைத்தியக்காரர்கள் என போலீசார் அறிவித்துவிடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.