தலவாக்கலை லிந்துலை நகர சபை நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் குப்பைகள் கடந்த மூன்று தினங்களாக அகற்றப்படாமல் அப்பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் நகர சபையின் தலைவர் அசோக் சேபாளவிடம் வினவிய போது,
தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வரும் 30 ஊழியர்கள் 8 பேர் ஒப்பந்த அடிப்படையில் நாள் சம்பளத்திற்காக கடந்த 10 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிந்த்தார் . இருப்பினும் அவர்களுக்கான பெப்ரவரி மாத சம்பளத்தை வழங்க தற்போதைய நகர சபையின் செயலாளர் வழங்க மறுப்பு தெரிவித்ததையடுத்து பணி பகிஷ்கரிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர சபையின் கீழ் பணியாற்றி வந்த 30 சிற்றூழியர்களும் கடந்த மூன்று தினங்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த 8 பேருக்கான சம்பளத்தை வழங்காவிடின் தொடர்ந்தும் அவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாகவும் நகரசபை தலைவர் தெரிவித்தார்.
குறித்த 8 ஊழியர்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாளாந்த சம்பளத்திற்காக பணியாற்றி வருவதோடு முதல் மூன்று மாதங்களில் இரண்டு மாதங்கள் சம்பளமின்றி பணியாற்றியதோடு நகரபிதா தமக்குரிய சம்பளத்தை வழங்கியதாகவும் பின்னர் சம்பள பட்டியல் ஊடாக தமது நாள் சம்பளத்தை பெற்று வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய செயலாளர் தமக்கான கொடுப்பனவை வழங்க மறுத்தமை காரணமாக தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது அனைத்து ஊழியர்களும் தலவாக்கலை நகரசபை காரியாலயத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தமக்குரிய வேதமனம் உரிய நேரத்தில் வழங்காவிடின் பணிபகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு நகரசபை தலைவர் மேலும் கூறுகையில் செயலாளரின் அனுமதி இன்றி குறித்து 8 பேரையும் பணிக்கு அமர்த்தியமையினாலேயே அவர்களுக்குரிய கொடுப்பனவை வழங்கமுடியாது உள்ளதாக செயலாளர் தெரிவித்ததாகவும் நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.