எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி, வர்த்தகரீதியிலான சேவையை நிறுத்தி வைக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது. எத்தியோப்பிய விபத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் தீவிரமாக பரிசோதனை செய்து, அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பிறகே விமான சேவை தொடங்கும் என சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.