தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் ஒரு கட்சி!

251 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு என்ற கரட் மரக்கறியைக் காட்டிக் கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டி வைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

யாழில் நடைபெற்ற ஊடகவியாளலர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதாக, ஆதரவு அளிப்பது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் ஒரு கட்சி. ஏன் இவ்வாறு கூறுகின்றோம் என்றால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு என்ற கரட் மரக்கறியைக் காட்டிக் கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டி வைத்துள்ளார். 

கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பு விவாதம் நடைபெற்ற போது, மக்கள் விடுதலை முன்னணி சார்பாக நான், அந்த வாத விவாதங்களில் நேர்மையாக செயற்பட்டோம். புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். 

நாட்டின் சமத்துவத்தைப் பேணும், மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டுமென நாங்கள் செயற்பட்டிருந்தோம். இந்த அரசியலமைப்பிற்கு எதிராக, மஹிந்த ராஜபக்ஷ இனவாத ரீதியாக தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தார். மறுபுறத்தில், ரணில் விக்ரமசிங்க கரட்டைக் காட்டி, தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கொண்டு செல்கின்றமை காணக்கூடியதாக உள்ளது. 

எனவே, அவர்களின் நிலைப்பாட்டின் படி, ஒரு போதும், நாட்டின் புதிய அரசியலமைப்பு வரக்கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் இருந்து தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டிருக்கின்றார். தற்போதும் செயற்படுகின்றார். அதனால், இனியும் புதிய அரசியலமைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை. 

இன்றும் கூட அரசியல் சாசனம் பற்றிப் பேசப்படுவதும் இல்லை, அரசியல் சபை கூடுவதும் இல்லை. அதற்கான எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்காத நிலை இருக்கின்ற போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் எந்த அடிப்படையில் நீங்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிக்கின்றீர்கள். 

அதனால், நாங்கள் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றோம். இதற்கு எதிராக செயற்பட வேண்டும். நாங்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதற்கும் தயார். ஆனால், ரணில் விக்ரமசிங்கவை நிராகரித்துவிட்டு, மக்கள் விடுதலை முன்னணியுடன் கைகோர்க்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார். 

ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒரு சில தேசிய பிரச்சினைகளை தீர்க்கின்ற நடவடிக்கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டால், நல்ல முன்மொழிவுகளை வைத்திருக்கின்றார். அந்த முன்மொழிவுகளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிலையான வைப்புக்களாக( பிக்ஸ் டெபோசிட்) வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 

கடந்த காலங்களில் நாட்டில் சதி ஏற்பட்ட போது, நாட்டின் சதியை முறியடிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல அமைப்புக்கள் இவற்றிற்கு எதிராக செயற்பட்டனர். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித் திட்டம் தோல்வியடைந்ததன் பின்னர், முன்னையவை போன்று ராஜபக்சாக்களை பாதுகாப்பதற்கும், ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கும், ஏதுவான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள். அதனால் தான் நாங்கள் குறிப்பிடுகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகளை அணிதிரட்டிய புதிய பாதையில் அணிதிரள்வதற்கான காலம் உருவாகியுள்ளது. 

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி, மக்களை வஞ்சிக்கின்ற சாக்கடை அரசுகளுக்குப் பின்னால் ஓடாது, வடபகுதி மக்கள் ஜனநாயகத்திற்கு எதிராக அணிதிரள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.