பெண்களின் வீரத்தை உலகிற்கு காட்டியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்!

655 0

பெண்களின் விடுதலை, தலைமைத்துவம், ஒழுக்கம், பண்பாடு, மேம்பாடு, உரிமைகள் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உலக அரங்கில் பறைசாற்றிய ஒப்பற்ற தலைவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது உலகறிந்த உண்மை.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய பெண்கள் எழுச்சி நாள் கிளிநொச்சி நகர் பசுமைப்பூங்காவில் இடம்பெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,

உலகத்திலே இன்று பெண்கள் தங்களுடைய உரிமைகளை உணருகின்றவர்களாக மாறியுள்ளனர். உலகத்திலேயே முதல் பெண் பிரதமரைத் தந்த நாடு இலங்கை. உலகத்திலேயே முதல் பெண் ஜனாதிபதியைத் தந்த நாடு இலங்கை என்றெல்லாம் பலவாறாக வரலாறு பேசப்படுகின்றது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரிய பங்கை வகித்தவர்கள் ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் தான். போரியலோடு சாதனை படைத்த காலத்தில், பெண்களும் சுதந்திரப் பறவைகள் என்ற பெயரோடு ஈழவரலாற்றில் சாதனை படைத்துள்ளார்கள்.

எமது மண்ணின், ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றிலே பல மாற்றங்களைத் தந்தவர்களாக, விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் விளங்குகின்றார்கள். எங்களுடைய வரலாறு வித்தியாசமானது. அந்த வரலாறுகளை எல்லாம் கடந்துதான் இந்த மண்ணிலே 30 ஆண்டுகளாக இடம்பெற்ற போராட்டத்திற்குப் பிற்பாடு, 2009 இல் இருந்து இன்றுவரை 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம்.

இன்று நாம் ஒரு சமூக விடுதலை இல்லாத, பெண் விடுதலை இல்லாத ஒரு கட்டத்துக்குள் நின்று நாங்கள் உரிமை பற்றிப் பேசவேண்டியவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றோம்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் வழங்கத் தவறியிருந்தால் இவ்வாறான ஒரு மகளிர் தினம் கொண்டாட முடிந்திருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று கோரியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்றாலும் சரி, மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி அனைத்திலும் 50 வீதம் பெண்களாக இருக்கவேண்டும் என்று நாம் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பெண்களுக்குரிய அந்தஸ்தையும், சம உரிமையையும் சரியான முறையில் வழங்கியிருந்தார். உலக அரங்கிலே ஒழுக்கம் கூடிய, கட்டுப்பாடு கூடிய படையணிகளுள் சோதியா படையணி, மாலதி படையணி என்று போரியல் வரலாற்றில் வீரம் செறிந்த தீரம்மிக்க பெண்கள் படையணிகளை உருவாக்கித் தந்த பெருமை எமது தேசியத் தலைவர் பிரபாகரனையே சாரும். என்றார்.