கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்காக தாம் சேவை செய்துள்ளதாக, அமல் குணசேகர என்றழைக்கப்படும் ‘பிம்சர’ என்ற சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் கடந்த மாதம் 22 கிராம் ஹெரோயினுடன் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேநகபருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் மூன்று வழக்குகளும், நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகளும், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவருக்கு எதிராக 5 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இவர் ஒரு பதிவுசெய்யப்பட்ட குற்றவாளி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தனது அடையாளங்களை மறைப்பதற்காக தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை எரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஹிருணிகாவின் தந்தையுமான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சமிந்த மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பிம்சர மீது பொலிஸார் ஏற்கனவே சந்தேகம் தெரிவித்திருப்பதாக, இவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.