அமெரிக்காவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலுடன், பாராளுமன்ற கீழ்சபையான பிரதிநிதிகள் சபைக்கும் (435 இடங்கள்), மேல்-சபையான செனட் சபையின் 34 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபைக்கும் இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தலுடன், பாராளுமன்ற கீழ்சபையான பிரதிநிதிகள் சபைக்கும் (435 இடங்கள்), மேல்-சபையான செனட் சபையின் 34 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபைக்கும் இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் இந்த தேர்தல், இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அமெரிக்க செனட் சபை தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் (வயது 51) போட்டியிடுகிறார். இவர் ஒபாமாவின் நம்பிக்கைக்கு உரியவர். அவரது ஆதரவுடன் களம் இறங்கியுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. அப்படி அவர் வெற்றி பெற்று விட்டால் செனட் சபையில் இடம் பெறும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெயரை பெறுவார். இதேபோன்று பிரமிளா ஜெயபால் (51) என்ற பெண், வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால், பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிற முதல் இந்திய வம்சாவளி பெண் ஆவார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் தற்போதைய உறுப்பினரான அமி பெரா (51) மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து 3-வது முறையாக போட்டியிடுகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோகன்னா (40), கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி தரப்பில் வேட்பாளராக நிற்கிறார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), ஜனநாயக கட்சி சார்பில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிடுகிறார். பீட்டர் ஜேக்கப் (30), நியூஜெர்சி மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் காணுகிறார். இந்த தேர்தல் மூலம் அமெரிக்க செனட் சபையிலும், பிரதிநிதிகள் சபையிலும் இந்தியர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.