இராணுவ முகாமை அகற்ற கோாி மக்கள் ஆா்ப்பாட்டம்

265 0

மட்டக்களப்பு முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும் மக்கள் போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறு கோரியும் பிரதேச மக்களினால் இன்று வெள்ளிக்கிழமை (8)காலை இராணுவ முகாமிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முறக்கொட்டான் சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன்  கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன்,கு.குணசேகரம்,சு.சுதர்ஷன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில்  இராணுவ முகாமிற்கு முன்பாக கூடிய  பொதுமக்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்திய வாறு கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘எமது காணி எமக்கு வேண்டும், “இராணுவமே வெளியேறு, “பாடசாலை காணியை உடன் விடுவி, “நாம் மரத்தடியிலும் தகரத்தடியிலும் கல்வி கற்பதா, “கௌரவ பிரதமரே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை, “ஜனாதிபதி அவர்களே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை போன்ற வசனங்கள் உள் அடங்கிய பதாதைகளை  ஏந்தி இருந்தனர்.

குறித்த போராட்டத்தின் முடிவின்போது ஜனாதிபதிக்கும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அரசாங்க அதிபருக்கும் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரனிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர்.