ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெறமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு இன்றியும் என்னால் வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்
இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
நாடு கடந்த மூன்றுதசாப்த காலமாக சிக்கியுள்ள சேற்றிலிருந்து அதனை மீட்பதற்கு இனரீதியில் பக்கச்சார்பற்ற -சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட -மையநீரோட்டத்துடன் சாரத தலைவர் ஒருவரிற்காக இலங்கை ஏங்குகின்றது என தான் நம்புவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
நான் வெற்றிபெறுவேன் என நம்புவதற்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கோத்தபாய ராஜபக்ச தனது இனரீதியில் பக்கச்சார்பற்ற அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட நிகழ்சிநிரல் காரணமாக சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளையும் தன்னால் பெறமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வாக்குகள் குறித்து மாத்திரம் சிந்திக்கும் அபிவிருத்தி குறித்து அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகள் குறித்து மக்கள் களைப்படைந்துவிட்டனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
நான் ஒரு மையநீரோட்ட அரசியல்வாதியில்லை இதுவே எனக்குள்ள சாதகமான நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை நான் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறவேண்டும் என்பது அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் 2010 இல் தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் மகிந்த ராஜபக்ச 1.8 மில்லியன் வாக்குகளை பெற்றார் என குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளை பெறாததால் அவர் 2015 இல் தோல்வியடையவில்லை மாறாக கம்பஹா,கொழும்பு போன்ற பகுதிகளை சேர்ந்த நடுத்தர வர்க்க சிங்களவர்கள் அவரிற்கு வாக்களிக்காததன் காரணமாகவே அவர் தோல்வியடைந்தார் எனவும் கோத்தபாயராஜபக்ச தெரிவித்துள்ளார்
மகிந்த ராஜபக்ச 449000 வாக்குகளாலேயே தோல்வியடைந்தார், தனக்கு சாதகமில்லாத நிலையிலும் அவர் வடக்கில் 100,000 வாக்குகளை பெற்றார் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜரிமையை கைவிடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கௌரவத்துடன் வாழ்வதற்கான தமிழர்களின் வேண்டுகோள்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச கௌரவம் என்பது அரசியல் அதிகாரத்தின் மூலம் மாத்திரம் கிடைப்பது என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களிற்கு உரிய கௌரவத்தை வழங்குவது என்பது அவர்களது வருமானத்தை உயர்த்தி வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரங்களிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கு பொருளாதாரமே காரணம் தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிப்பது போன்று அரசியல் காரணங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அதிகாரப்பகிர்வு பிரச்சினைகளிற்கு தீர்வை கொண்டுவருமா என தமிழ் அரசியல்வாதிகள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள் பிழையான திசையில் பயணித்துக்கொண்டுள்ளன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டு தங்களது மக்களை அபிவிருத்தி செய்யவிரும்பில்லை,அதிகாரத்திற்கு வெளியே எதிர்கட்சியாகவிருந்து அவர்கள் எதனை சாதித்துள்ளனர் வடமாகாணத்திற்கு பொறுப்பாக அவர்களை மக்கள் தெரிவு செய்தவேளை அவர்கள் எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை அபிவிருத்திக்காக அனுப்பபட்ட நிதியை திருப்பினுப்பினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இனஅடிப்படையிலான அரசியல் அரசியல் தீர்வையும் பொருளாதார அபிவிருத்தியையும் தாமதித்துள்ளது எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்