இன்று மகளிர் தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

300 0

உலக மகளிர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

உலக மகளிர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
டாக்டர் ராமதாஸ் 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
உலகின் ஆக்கும் சக்தியான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் மகளிர் தினம் கொண்டாடும் நிலையில், மகளிர் சமுதாயத்துக்கு வாழ்த்துகள். மகளிரின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சாத்தியமாகட்டும் என இந்த நன்னாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
கே.எஸ்.அழகிரி 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி:–
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் சமுதாயத்துக்கு உலக மகளிர் தின வாழ்த்துகள். உள்ளாட்சி அமைப்புகளில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படுவதன் மூலமே, மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மகளிரின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்து செய்தியாக இருக்கமுடியும்.
விஜயகாந்த் 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:–
மனித இனத்தை பாதுகாப்பது தாய்க்குலங்களே. அந்த தாய்க்குலங்களை போற்றும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை இன்றைய காலத்தில் இருபாலரும் ஒருசேர சமாளிக்க வேண்டியுள்ளது. பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் தே.மு.தி.க. என்றென்றும் இருக்கும். மகளிர் தின வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன் 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:–
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மகளிர் ஆற்றும் பணிகள் சிறப்பு வாய்ந்தவை. குடும்பம் முன்னேற்றம் அடையவும் மகளிரே முதன்மையான முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்களுக்கான தனி சலுகைகள், உதவிகள் செய்து கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக வாழ மத்திய–மாநில அரசுகள் நல்ல சூழலை ஏற்படுத்தி தரவேண்டும்.
சரத்குமார் 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:–
வீட்டுக்குள்ளே பூட்டிக்கிடந்த பெண் சமுதாயம், இன்று விண்ணில் பறந்து சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும்பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவை பெண். அடுத்தவர்களுக்காகவே அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ பிறந்த அவதாரம் பெண். மகளிர் தின வாழ்த்துகள்.
கே.பாலகிருஷ்ணன் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:–
உலகெங்கிலும் சமத்துவத்துக்காகவும், பெண்ணுரிமைக்காகவும், கண்ணியமான வாழ்க்கைக்காகவும் குரல் கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள். சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. அது மாறவேண்டும். மகளிரின் பாதுகாப்பான வாழ்க்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து போராடும்.
முத்தரசன் 

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:–
இன்றைய நவீன உலகில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் வியத்தகு ஆற்றலை படைத்து வருகிறார்கள். பெண்களின் திறனும், வெற்றியும் தடைகளை தாண்டி நாள்தோறும் வெளிப்பட வேண்டும். பெண்ணியம் வாழவேண்டும். பெண்களின் உரிமை போராட்டங்கள் வெல்ல வேண்டும். மகளிர் தின வாழ்த்துகள்.
அன்புமணி ராமதாஸ் 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:–
உலகிலேயே மகளிருக்கு அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம். பெண்களை கடவுளுக்கு மேலாக வைத்து வழிபடுவதும் தமிழ் சமுதாயமே. மனித நாகரிகம் வளர காரணமான மகளிரின் முன்னேற்றம் குறித்த அனைத்து இலக்குகளையும் எட்ட மகளிர் உரிமை வென்றெடுக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். வெற்றி பெறுவோம்.
டி.டி.வி.தினகரன் 
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:–
மனித குலத்தை வாழவைக்கின்ற பெண் எனும் போற்றுதலுக்குரிய பெரும் சக்திக்கு நெஞ்சம் நிறைந்த உலக மகளிர் தின வாழ்த்துகள். எத்தனையோ இன்னல்களை, இடையூறுகளை தாங்கி இந்த பூமிக்கு மகிழ்ச்சி பூக்களை பரிசாக தருபவர்கள், பெண்கள். பெண்களே பூமியை இயக்கும் அச்சாணிகள். அவர்களின் உழைப்பும், தியாகமும், அன்பும் எவற்றோடும் ஈடு செய்ய முடியாதவை.
மேலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனர் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் நெல்லை ஜீவா உள்பட ஏராளமானோர் மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.