ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு – விவசாயிகள் மகிழ்ச்சி

361 0

தமிழகத்தில் புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மஞ்சளுக்கு பெயர் பெற்ற மாவட்டம் ஈரோடு மாவட்டம். இங்கு உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பல மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வைகான் மஞ்சளுக்கும் ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மலை மஞ்சள் ஆகியவற்றுக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

அதே போல் தமிழகத்தில் ஈரோடு மஞ்சளின் தன்மைகள், சிறப்புகள் மண்ணின் தன்மை மஞ்சள் விளையும் பகுதிகளின் எல்லை போன்றவை குறித்து இந்திய புவிசார் குறியீடு பதிவகத்தில் கடந்தாண்டு விண்ணப்பிக்கப்பட்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்க ஈரோடு மஞ்சள் வணிகர்கள் கிடங்கு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது என இந்திய புவிசார் குறியீடு பதிபக இணைப்பதிவாளர் சின்னராஜா நாயுடு கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “ஈரோடு மண்ணின் தன்மை, தண்ணீர்(காவிரி ஆறு) வளம், மஞ்சளின் தரம், மருத்துவ குணம் கொண்டதாகவும் ஈரோடு மஞ்சள் திகழ்கிறது. இதை தொடர்ந்து ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஈரோடு மஞ்சள் இனி உலக அளவில் பேசப்படும்” என்று கூறினார்.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் கூறும்போது, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி ஈரோடு மஞ்சள் உலகப்புகழ் பெறும். மேலும் நல்ல விலையும் கிடைக்கும் என்று கூறினர்.