நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
தேர்தலுக்கான ஏற் பாடுகள் அனைத்தும் மாநிலங்களிலும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தலைமை செயலகத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கடந்த ஜனவரி 31-ந்தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் உள்பட ஆன்லைன் மூலமாகவும், அலுவலகங்களிலும் மொத்தம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 888 விண்ணப்பங்கள் (பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்பட) பெறப்பட்டன. இவற்றில் ஆன்லைன் மூலமாக 2 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. கடந்த ஒரு மாதத்தில் இவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதிகபட்சமாக சென்னையில் 86 ஆயிரத்து 308 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 6,100 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. திருவள்ளூரில் 55 ஆயிரத்து 957, காஞ்சீபுரத்தில் 75 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களின் நிலை பற்றி இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் வரை பெயர் சேர்ப்பு, திருத்தங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படும். அந்த நாளுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை வந்துள்ள விண்ணப்பங்கள்தான் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பெயர் இடம்பெற்றுள்ளதா, சரியாக எழுதப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால் 1950 என்ற இலவச எண்ணுக்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்.
ஏனென்றால், ஒரு வாக்குச்சாவடியில் 14 ஆயிரம் பெயருக்கு மேல் இடம் பெற்றிருந்தால், மீதமுள்ள பெயர்களை அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றி இருக்கிறோம். கடைசி நேரம் வரை இருக்காமல் உடனடியாக அதை ஒவ்வொருவரும் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
2018-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 65 ஆயிரத்து 972 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது அது 67 ஆயிரத்து 664 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால் கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
அந்த வகையில் 343 துணை வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 7 ஆக உயரும். தேர்தல் பணிக்காக 3 லட்சத்து 36 ஆயிரத்து 533 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3,818 வாக்குச்சாவடிகளில் (துணை வாக்குச்சாவடிகள் 64) 20 ஆயிரத்து 800 பேர் பணியமர்த்தப்படுவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,638 வாக்குச்சாவடிகளில் (துணை வாக்குச்சாவடிகள் 55) 17 ஆயிரத்து 993 பேர் பணியமர்த்தப்படுவார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4,157 வாக்குச்சாவடிகளில் (துணை வாக்குச்சாவடிகள் 55) 19 ஆயிரத்து 952 பேர் பணியமர்த்தப்படுவார்கள். தற்போதுள்ள நிலவரப்படி நகர்ப்புறங்களில் 26 ஆயிரத்து 133 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 41 ஆயிரத்து 531 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக நம்மிடம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 932 எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்கள் (இ.வி.எம்.), 91 ஆயிரத்து 902 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 88 ஆயிரத்து 447 வாக்கை உறுதி செய்யும் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் உள்ளன. தேவைக்கும் கூடுதலாக முறையே 4,950, 4,460, 16 ஆயிரத்து 260 எந்திரங்கள் உள்ளன. தேர்தலுக்காக அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன.
முதலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு 6-ந்தேதி கடிதம் அனுப்பி இருக்கிறேன்.
பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு இதுபோன்ற புகார்களை கவனிப்போம். தேர்தல் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் எந்தவொரு அரசுத் திட்டமும், நடைமுறையில் இருக்கும் திட்டமாகத்தான் கருதப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் அதை தடை செய்ய முடியாது. ஆனால் புதிய திட்டங்களைத்தான் செயல்படுத்த முடியாது.
தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு திட்டங்கள் இருக்கிறதா என்று கேட்டால், நம்மிடம் ஏற்கனவே பறக்கும் படைகள், கண்காணிப்பு படைகள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்துவோம். அவற்றுக்கென்று தனித்தனி பணிகள் உள்ளன. எந்தெந்த பகுதிகளில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்பதை கண்காணித்து அதை கண்டிப்பாக கட்டுப்படுத்துவோம். நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
தேர்தல் நடத்துவதற்கான அனைத்து தரப்பு தயார்நிலை பற்றி இந்திய தேர்தல் ஆணையம் எங்களை கேட்டது. அனைத்துமே தயாராக இருப்பதாக கூறியிருக்கிறோம்.
வேட்புமனு தாக்கல் தொடர்பான தேர்தல் விதிகளில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஓராண்டுக்கான வருமான வரிக் கணக்கை மட்டுமே வேட்புமனுவோடு தாக்கல் செய்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி கடந்த 5 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை வேட்பாளர் தாக்கல் செய்யவேண்டும்.
அதோடு, சேர்ந்து வாழும் இந்து குடும்பம் என்றால், அந்த குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் மற்றும் மொத்த சொத்துகளின் கணக்கையும் அவர்கள் காட்டவேண்டும். வருமான வரிச் சட்டத்தில் அதற்கென்று தனி பிரிவு உள்ளது.
மேலும், வெளிநாடுகளில் சொத்துகள் இருந்தால், அதுதொடர்பான கணக்குகளையும் வேட்பாளர் காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் வேட்பாளருக்கு பிரமாணம் செய்து வாக்குமூலம் கொடுப்பவரின் கையெழுத்து, யார் முன்னிலையில் சான்று உறுதி பெறப்படுகிறதோ, அந்த நோட்டரி அல்லது மாஜிஸ்திரேட்டின் முத்திரை ஆகியவை அனைத்துப் பக்கங்களிலும் பெறப்பட வேண்டும்.
சி.விஜில் என்ற செல்போன் செயலியின் மூலம், தேர்தல் நடத்தை விதிகளை மீறியது பற்றிய படங்களை அனுப்பலாம். பணப்பட்டுவாடா, மது வழங்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்கள் பற்றிய தகவல்கள், படங்கள், வீடியோக்களை அனுப்பினால் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். தகவல் அனுப்பியவரின் தகவல்கள் வெளியிடப்படமாட்டாது.
இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஓட்டுனர் உரிமம், மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள், மருத்துவ காப்பீடு அட்டைகள், பான் அட்டை உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களைக் காட்டி ஓட்டுபோட முடியும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் இவற்றை பயன்படுத்தி ஓட்டு போடலாம். பூத் சிலிப்புகளை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. ஆனால் அதை ஒரு அடையாள ஆவணமாக யாரும் பயன்படுத்த முடியாது.விதி 49-பி
அதன்படி, அந்த ஆவணங்களில் ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று ஓட்டு போடும்போது, அந்த ஓட்டை வேறு யாரோ போட்டுச் சென்றிருந்தால், 49-பி என்ற தேர்தல் விதிமுறை பிரிவின்படி வாக்களிக்க வாய்ப்பு கோரலாம்.
அவருக்கு இதற்கென்று வைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டு தரப்படும். அதில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியில் இருக்கும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின்போது தேவைப்பட்டால் அந்த ஓட்டு எண்ணப்படும்.
தமிழகத்தில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 200 கம்பெனி துணை ராணுவம் கோரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் செலவு தொகை ரூ.70 லட்சமாகவும், சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் செலவு தொகை ரூ.28 லட்சமாகவும் உள்ளது.
பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாது. அதற்கான அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் (கலெக்டர்கள்) வழங்கியிருக்கிறோம். தேர்தல் செலவுக்கான தொகை ரூ.414 கோடியை கோரியிருந்தோம். அதை அரசு அனுமதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.