பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார்நிலையில் இருக்கிறோம் என்று இந்திய விமானப்படை கூறியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.
இத்தகைய சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய விமானப்படை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஓமன், ஈரான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான வான்மண்டலத்தை மட்டுமே பாகிஸ்தான் திறந்து விட்டுள்ளது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் வான்மண்டலத்தில் உள்ள 11 நுழைவு, வெளியேறும் பகுதிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இதை பார்க்கும்போது, பாகிஸ்தானிடம் இருந்து அச்சுறுத்தல் வரக் கூடும் என்று தெரிகிறது.
எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும், அதை சந்திக்க முழு தயார்நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தான் விமானப்படையின் அத்துமீறல்களை கண்டறியவும், முறியடிக்கவும் வான்பகுதியில் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்லை ஓரம் உள்ள விமானப்படை தளங்கள் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராணுவ நிலைகளுக்கு நேற்று நேரில் சென்றார். ராணுவத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, ராணுவத்தின் தயார்நிலை, பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தளபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
ராணுவத்தின் திறன் குறித்து ராணுவ தளபதி முழு திருப்தி தெரிவித்தார். விமானப்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தயார்நிலையில் இருக்குமாறு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தினார்.