வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தடுப்புப்படையில் இடம்பெற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர் குண்டு வெடிப்பில் பலியானார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நன்கார்ஹர் மாகாணத்தில் உள்நாட்டு தலிபான் தீவிரவாதிகள் மற்றும் ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் வன்முறை தாக்குதல்கள் மூலம் அன்றாடம் நூற்றுக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாடும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவத்துடன் அமெரிக்க படையினரை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள நன்கார்ஹர் மாகாணத்திற்குட்பட்ட அச்சின் மாவட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் – அமெரிக்க கூட்டுப்படையினர் ஒரு வாகனத்தில் சென்றவாறு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் சென்ற வழியில் புதைத்து வைக்கப்படிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் அமெரிக்க வீரர் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்க படைகளுக்கு தலைமை தாங்கிவரும் ஜெனரல் ஜான் நிக்கோல்சன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீது கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய படையெடுப்புக்கு பின்னர் அங்கு சுமார் 2300 அமெரிக்க வீரர்கள் பல்வேறு சம்பவங்களில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.