சர்வதேச அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தையே மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ளாதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நிதி அமைச்சர் மங்கள சமவீரவினால் கடந்த 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது சர்வதேச அமைப்புக்களால் தயாரிக்கப்பட்டதொன்றாகும். வரவு செலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகையை 3.5 ஆக ஏற்படுத்தவேண்டும் என்ற நிபந்தனை சர்வதேச நிதி நிறுவனங்களின் கோரிக்கையாகும். அதனால்தான் அரசாங்கத்தின் வரிகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திகளை நிறுத்தி இருக்கின்றது.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் 9 வருடத்தில் 5 ரில்லியன் கடன் பெற்றுக்கொண்டிருந்தது. அந்த கடன்களைக்கொண்டு மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் அபிவிருத்திகளை காட்டமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து மூன்றரை வருடங்களில் 5ரில்லியன் கடன் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அதற்கு மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் என்ன என்று தெரிவிக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.