ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்மொழியப்பட்ட விடயங்களுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தும் இன்றிவரை இலங்கையில் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை, இந்த நாட்டில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் இதுவா நல்லாட்சியென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆகவே இந்த அரசாங்கத்துடன் நல்லிணக்கம் பேசி பிரயோசனமில்லை. தமிழர் இன அழிப்புக்கு யார் காரணமோ அவர்களிடமே தமிழ் மக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்படவில்லை. எம்முடன் மட்டும் தான் நல்லிணக்கம் பற்றி பேசுகின்றீர்கள். ஆனால் நல்லிணக்கம் என்பதை சிங்கள தரப்பு சிந்திக்க வேண்டும்.
வடக்கில் உள்ள இராணுவ வெற்றி சின்னங்களுக்கு முன்னாள் நின்று நீங்கள் நல்லிணக்கம் பற்றி சிந்தியுங்கள். நல்லிணக்கம் என்பது யாரால் கொண்டுவரப்பட வேண்டும், யார் முதலில் பேச வேண்டும் என்பது அனைத்துமே கேள்விதான்.
காணாமால் போனவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படுவது குறித்து அமைச்சர் கூறினார். ஆனால் காணாமலாக்கப்பட்டோர் எங்கே இருக்கின்றனர் என்ற உண்மையை யாரும் கூறியதாக இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் குற்றவாளிகளின் கைகளில் தான் தமிழர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யார் இந்த இன அழிப்புக்கு காரணமோ அவர்களிடமே தமிழ் மக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.