இரணைமடுக்குளத்து நீர் வீண் விரயமாகின்றது!

275 0

கிளிநொச்சி இரணைமடுக் குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும் அதன் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குளத்திலுள்ள நீர் அதிகளவில் வெளியேறி வீண் விரயமாகி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்

வடமாகணத்தில் அதி முக்கியத்துவம்பெறும் குளமாக கருப்படுகின்ற இரணைமடுக்குளம் கடந்த 2015ஆம் ஆண்டு மீள் புனரமைக்கப்பட்டுள்ளது.

34 அடியாக காணப்பட்ட குளம் அபிவிருத்திக்கு பின் தற்போது 36 அடியாக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு பெருந்தொகை நிதியில் புனரமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதியால் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட இக்குளத்தின் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நாளாந்தம் பெருமளவான நீர் வெளியேறி வருகின்றது.

அதாவது இரணைமடுக்குளத்திலிருந்து உருத்திரபுரம் முரசுமோட்டை ஊரியான் போன்ற பகுதிகளுக்கான நீர் விநியோக வாய்க்காலின் பிரதான கதவு உரிய முறையில் புனரமைக்கப்படாமையினால் இவ்வாறு நீர்வெளியேறி வருகின்றது.

இவ்வாறு வாய்காலினால் வெளியேறும் நீரினால் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கிளிநொச்சிக்குளம் நிரம்பி வான் பாயும் அளவுக்கு காணப்படுகின்றது.

இதைவிட, முரசுமோட்டை பன்னங்கண்டி போன்ற பகுதிகளில் வயல் நிலங்களில் அதிகளவான நீர் வீண் விரயமாகிக் காணப்படுகின்றன.

இதுவரை ஏறத்தாள 2 ஆயிரம் ஏக்கர் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நீர் வெளியேறியிருப்;;பதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மாவட்டப் பிரதி நீர்ப்;பொறியியலாளர் என்.சுதாகரன்,  இரணைமடு நீர்ப்பாசனப்பொறியியலாளர், திட்டப்பணிப்பாளர் பிறேம்குமார் ஆகியோர் உரிய பதிலை வழங்க மறுத்துள்ளனர்.

இரணைமடுக்குளத்தில் புனரமைப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் வட்டக்கச்சி, பிரதேசத்துக்கான பிரதான நீர் விநியோக வாய்க்கால் கதவு மற்றும் அதன் புனரமைப்புக்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதேபோன்று இரணைமடுக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம், உருத்திரபுரம் முரசுமோட்டை ஆகிய பகுதிகளுக்கு பிரதான நீர் விநியோக வாய்க்காலின் கதவு புனரமைப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகவே இவ்வாறு குளத்தின் நீர் வெளியேறி வருவதாகவும் இது தொடர்பில் ஒப்பந்தக்காரர்களை அழைத்து இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள போதும், அதனைப்புனரமைப்பதில் காலதாமதங்கள் காணப்படுவதாகவும் இவ்வாறு நீர் வீண்விரயமாவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.