தமிழ்நாட்டுக்கு இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
வடஇந்தியாவின் காசி பகுதிக்குட்பட்ட வாரணாசி தொகுதி எம்பியான நான் தமிழக மக்களை சந்திக்க காஞ்சி நகருக்கு வந்துள்ளேன். உலகின் மிகவும் அழகிய தொன்மை வாய்ந்த மொழியினால் நமக்கு பெருமை.
நம் நாட்டில் உள்ள நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி நகரம் என கவி காளிதாஸ் கூறியுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு கனவு திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றி வைத்துள்ளது. இதில் சில திட்டங்களுக்கு இன்று நான் இங்கே அடிக்கல் நாட்டியுள்ளேன்.
சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்துள்ளேன். எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதர் இந்த சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் இதயங்களிலும் நீங்காத முக்கிய சிறப்பிடத்தை பிடித்தவர்.
ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தனது ஆட்சியின் மூலம் அவர் நிறைவேற்றி வைத்தார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் இனி அறிவிப்புகள் தமிழிலும் தெரிவிக்கப்படும் என்னும் இரு மகிழ்ச்சியான அறிவிப்புகளை இன்றைய நாளில் தமிழக மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.