மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

543 0

இறுதிக்கட்டத்தின்போது  ராணுவத்திடம் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடகிழக்கெங்கும் இடம்பெறும் போராட்டங்கள் இரண்டு வருடத்தை கடந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தவகையில் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக  இரண்டு  வருடங்களாக வீதியில்  இருந்து போராடி வருகின்ற தமக்கு இதுவரை எந்த  ஒரு  நீதியும் வழங்கப்படாத  நிலையில்  40ஆவது ஜெனிவா கூட்டத்தொடர்  இடம்பெற்றுவரும் நிலையில்  ஜெனிவாவில் ஆவது  தங்களுக்கு ஒரு தீர்வு ஒன்றை நிரந்தரமாக வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் 19ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற இருக்கின்றது.

அந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்புகளையும் பூரண ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதோடு  முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017.03.08 அன்று ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம் எட்டாம் திகதி இரண்டாவது வருடத்தை கடந்து மூன்றாவது வருடத்தில் கால்பதிக்கும்  இந்த வேளையிலே எட்டாம் திகதி தங்களுடைய போராட்ட இடத்தில் காலை 10 மணி முதல் 12 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் அந்த போராட்டத்திற்கும் ஆதரவு வழங்குவதோடு 19 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு கோரி இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு தெரிவித்திருக்கின்றார்கள்.