திமுகவை அணுகிய தேமுதிக நிர்வாகிகள்… சீட் இல்லை என்று திருப்பி அனுப்பிய துரைமுருகன்!

446 0

தேமுதிக நிர்வாகிகள் சிலர் இன்று தன்னை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், திமுகவில் சீட் இல்லை என்று கூறி அனுப்பியதாகவும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். 

தனது இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்தது பற்றி தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். 

தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் சேர விருப்பமில்லை என தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். முதலில் சுதீஷ் தொலைபேசியில் பேசி திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக அணிக்கு வர விரும்புவதாக சுதீஷ் கூறினார். 

தே.மு.தி.க. இணைந்தால் கொடுப்பதற்கு எங்களிடம் போதிய சீட் இல்லை தருவதற்கு, மன்னிக்கவும் என சுதீஷிடம் கூறிவிட்டேன். அ.தி.மு.க. உடனான தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு இருக்கிறது.

நேரில் சந்தித்தவர்களிடமும் தெளிவாகக் கூறிவிட்டோம். கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணிக்கு வருவதாக விருப்பம் தெரிவித்தது பற்றி ஸ்டாலினிடம் பேசுவேன். திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி செய்தால் பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்தித்ததாக இளங்கோவன் தெரிவித்தார்.