சீன அரசு இந்த ஆண்டு தனது ராணுவத்திற்கான பட்ஜெட்டை 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 177.61 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை நெருங்கி உள்ளது. 2015ம் ஆண்டு வரை இரட்டை இலக்க சதவீதத்தில் பட்ஜெட்டை உயர்த்திய சீனா, 2016ம் ஆண்டு 7.6 சதவீதமும், 2017ம் ஆண்டு 7 சதவீதமும், 2018ம் ஆண்டு 8.1 சதவீதமும் உயர்த்தியது.
இந்த ஆண்டும் ராணுவ பட்ஜெட்டை உயர்த்தி உள்ளது. இன்று சீன பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 177.61 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7.5 சதவீதம் அதிகம் ஆகும். இதன்மூலம், அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை (200 பில்லியன் டாலர்) சீனா நெருங்கி உள்ளது.
சீனாவின் ராணுவ பட்ஜெட் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம். இந்தியா இந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 3.18 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது. இது கடந்த ஆண்டைவிட 6.87 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது ராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்களை செய்துள்ளது. வெளிநாடுகளிடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற்படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்துள்ளது. ராணுவத்தின் (பிஎல்ஏ) துருப்புகளை மூன்று லட்சமாக குறைத்துள்ளது. இவ்வாறு படைவீரர்களை குறைத்தபோதிலும், 2 மில்லியன் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.