கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க., அ.தி.மு.க. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இரு கூட்டணிகளிலும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் முழுமைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந்தேதி தமிழகம் வந்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
அவர் தமிழகத்தில் எங்கிருந்து பிரசாரத்தை தொடங்குவார் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் வரும் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல்காந்தி தமிழகம் வருவது இது முதல் முறையாகும். எனவே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராகுல்காந்தி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் நாளை நடக்கும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசார கூட்டம் அமைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.