புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள், தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக களமிறங்கி உள்ளது. இந்நிலையில், புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் உள்ள மிர் மொகல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதிக்கு நேற்று இரவு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து முன்னேறினர். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தபடி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை நிறுத்தினர். இரவு நேரத்தில் தாக்குதல் நடைபெறவில்லை .
பின்னர் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் மீண்டும் முன்னேறி பயங்கரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர். அத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை குண்டு வீசி தகர்த்தனர். இதனால் வீடு தீப்பற்றி எரிந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் பதுங்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரால் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன் இன்டர்நெட் சேவை நிறுத்திவைக்கப்பட்டது.