தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஜனநாயக நீரோட்டத்தில் செல்வதாக தெரிவிக்கின்றபோதும் தனி இராஜ்ஜியம் அமைக்கும் திட்டத்திலே இன்னும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணியினர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி,வி. விக்கினேஸ்வரன் போன்றவர்களின் தூண்டுதலிலே கண்காணிப்பாளர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மனித உரிமை பேரவையில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அதிகாரி ஒருவரை நியமிப்பதானது எமது நாட்டின் சுயாட்சி, இறையாண்மையில் தலையிடும் செயலாகும். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதனை அரசாங்கம் நிறைவேற்ற தவறியுள்ளது. அதற்காக இந்த பிரச்சினையை தீர்க்க நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு தலையீடுகளை அனுமதிக்க முடியாது என்றார்.